search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரவ கொலை"

    பீகார் மாநிலத்தில் காதலனுடன் ஓடியதால் பெற்ற மகள் என்றும் பாராமல் கவுரவ கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். #Honourkilling
    பாட்னா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.

    நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    முதலில் இது கற்பழிப்பில் நடந்த கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிப்பு நடக்கவில்லை என்று தெரியவந்ததால் கொலைக்கு வேறு காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.


    அதற்காக பெற்றோர் மற்றும் சிறுமியின் அக்காள், தங்கைகளை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் இது கவுரவ கொலை என தெரியவந்தது.  சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்து 3 நாட்களுக்கு பின் திரும்பியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோரே கவுரவ கொலை செய்துள்ளனர்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். #Honourkilling
    கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண் அம்ருதாவை உடுமலைப்பேட்டை கவுசல்யா சந்தித்து ஆறுதல் கூறினார். #HonourKilling
    ஐதராபாத் :

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் (வயது 22) கடந்த 2016-ம் ஆண்டு கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய காதல் மனைவி கவுசல்யாவையும் அந்த கும்பல் வெட்டியது.

    பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறினார். இது தொடர்பாக கவுசல்யா வழக்கு தொடர்ந்தார். இந்த கவுரவ கொலை வழக்கில் அவருடைய தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சாதீய அநீதிகளுக்கு எதிராக கவுசல்யா குரல் கொடுத்து வருகிறார்.

    இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட அம்ருதா கண் முன்னே அவருடைய காதல் கணவர் பிரனய்குமார் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கவுரவ கொலை வழக்கில் அம்ருதாவின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

    கர்ப்பிணியான அம்ருதா தற்போது பிரனய்குமாரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவரை, கவுசல்யா சந்தித்து பேசினார். அப்போது சங்கர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை காண்பித்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கவுசல்யா விளக்கினார். கவுசல்யா தன்னுடன் வக்கீலையும் அழைத்து சென்று இருந்தார்.

    இந்த சந்திப்பின்போது, “சங்கர் கொலை வழக்கில் 58 முறை தன் பெற்றோரின் ஜாமீன் மனுவை எதிர்த்தேன், 6 பேருக்கு தூக்கு தண்டனை கிடைக்க போராடினேன்” என கவுசல்யா கூறினார்.

    இதை அனைத்தையும் கேட்ட அம்ருதா, “தன் காதல் கணவர் கொலைக்கு காரணமான அனைவரையும் தூக்கில் போட வேண்டும். என் சித்தப்பா வெளியே வந்தால் எனக்கும், என் வயிற்றில் இருக் கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என அச்சம் தெரிவித்தார்.

    “நீங்கள் கோர்ட்டில் நடந்ததை கூறுங்கள், கொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்” என கவுசல்யா ஆறுதல் கூறினார். #HonourKilling

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் கண் முன்னே தந்தை அனுப்பிய கூலிப்படையால் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Telangana #HonourKilling
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதா மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மாருதிராவ், கூலிப்படையை ஏவி, மகளின் கணவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

    இதற்காக கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த சர்மா என்பவரை வைத்து இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.

    பொது இடத்தில் தன் மனைவியின் கண் முன்னேயே பிரணாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது. வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இதனை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளி சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளியை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலைக்கு பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #HonourKilling #Telangana
    குடும்பத்தின் கவுரத்தை குலைப்பதாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #HonourKilling
    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவருடன் பவுசியா என்ற பெண் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். அதன்பிறகு பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டனர்.

    அதையடுத்து, பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் தந்தை இக்பால், மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    குடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #HonourKilling
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதே ஆன தன் மகளுக்கு விஷம் அளித்துவிட்டு, அவர் சாவதற்காக அருகிலேயே காத்திருந்த கொடூர மனம் கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று சுக்ரதால். இங்கு அமைந்துள்ள ஒரு சுடுகாட்டின் வெற்றிட பகுதியில் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று மாலை அந்த குழுவினர் அப்பகுதிக்கு வந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருக்க, அருகே ஒரு நபர் நிற்பதை கண்டனர்.

    இவர்களை பார்த்ததும், அந்த சிறுமியும் இவர்களை சைகை மூலம் அழைக்க அப்பகுதிக்கு விரைந்த இளைஞர்களிடம், தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் சிறுமி தனது மரண தருவாயில் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்ட, அங்கிருந்த அவரது தந்தை தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் தானு என்பதும், அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த விசாரணையிலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக தானு தெரிவித்துள்ளார். அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனால் வேறுவழியின்றி தனது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து, அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுந்தர் சிங்குக்கு தற்போது நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

    பெற்ற பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும் முழு அதிகாரம் கொண்ட பெற்றோர்களே, சிறு சிறு தவறுகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனைகளை வழங்குவது சரியான தீர்வாக அமையாது என்பதை அனைவரும் உணரவே வேண்டும்.
    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தென்மலா பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்பவர் காரில் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணை கெவின்ஜோசப் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கெவின்ஜோசப்பை கவுரவ கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சாக்கோ, சானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாக்கோவின் மனைவி ரஹானா மற்றும் உறவினர்கள் ரமீஸ், ரசல், சானு, சினு ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சாக்கோவும், சானுவும் கொலை நடந்தவுடன் ரஹானாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஹானாவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    பெங்களூரு, கோவா போன்ற பகுதிகளுக்கும் ரஹானாவை தேடி போலீஸ் படை சென்று உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஹானாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு அவர் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் ரஹானாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து வருவதாகவும், போலீசார் பற்றிய தகவல்களையும் அவர் உடனுக்குடன் ரஹானாவுக்கு தெரிவிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த உறவினர் உள்பட சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கெவின் ஜோசப் கொலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, ஏட்டு அஜய்குமார் ஆகியோர் ஏற்றுமானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #honourkilling #kerala #lovemarriage
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்ற தலித் வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி கெவின் ஜோசப்-நீனு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கூலிப்படை உதவியுடன் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொன்று அவரது பிணத்தை ஆற்றில் வீசினார்கள்.

    கேரளாவில் நடந்த இந்த கவுரவக்கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    இந்த கொலைக்கு போலீசாரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று ஆரம்பத்திலிருந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி இதுபற்றி காந்தி நகர் போலீசில் புகார் செய்த போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிபு, தற்போது முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் உடனடியாக இந்த புகார் பற்றி விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு அது உண்மை என்று தெரிய வந்ததால் அவரும் அதே போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிஜு ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த கொலையில் குற்றவாளிகளுக்கு காந்தி நகர் போலீசார் உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி ஐ.ஜி. தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், போலீசார் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது.



    இதை தொடர்ந்து காந்தி நகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜு மற்றும் இரவு பணியில் இருந்த ஏட்டு அஜய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவுடன் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீனுவின் சகோதரர் சானு சாக்கோ போனில் பேசியதற்கான ஆதாரமும் சிக்கி உள்ளது.

    இந்த கொலை வழக்கில் ஏற்கனவே நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், சகோதரர் சானு சாக்கோ உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த நிஷாது (வயது 24), சிபின் (27), ஜெரோம் (24) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் உள்பட 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.#honourkilling #kerala #lovemarriage
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவுவதாக போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவரும் கொல்லம் அருகே தென்மலை பகுதியை சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெவின்ஜோசப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர்.

    இதனால் கெவின் ஜோசப் - நீனு ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், அண்ணன் சயானு சாக்கோ ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் சயானு சாக்கோ தலைமையிலான கும்பல் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட சாக்கோ ஜாண், சயானு சாக்கோ ஆகியோர் நேற்று கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலையில் ஆரம்பம் முதலே போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி நீனு காந்திநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஷிபு, தான் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் உடனே அந்த புகாரை விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    அவர் உடனடியாக விசாரணை நடத்தி இருந்தால் கெவின் ஜோசப்பை காப்பாற்றி இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஷிபு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளி சயானு சாக்கோ கொலை நடந்த அன்று காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    அந்த உரையாடலில் சயானு சாக்கோ அந்த போலீசிடம் கூறுகையில் நாங்கள் கெவின் ஜோசப்பின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினோம். அங்கிருந்த கெவின் ஜோசப்பை காரில் கடத்திச் சென்றோம். எனக்கு பின்னால் வந்த காரில் கெவின் ஜோசப்பை ஏற்றி வந்தபோது அவர் எங்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் எப்படியும் உங்கள் போலீஸ் நிலையத்திற்குதான் வருவார் என்று கூறுகிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் போலீஸ்காரர் கெவின் ஜோசப் எப்படி தப்பினார், எந்த இடத்தில் வைத்து தப்பிச் சென்றார் என்று கேட்கிறார். அவரது கேள்விகளுக்கு சயானு சாக்கோ பதில் அளிக்கும்போது இடம் சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறேன். பயப்படாமல் இருங்கள் என்று அவருக்கு தைரியம் அளிக்கிறார்.

    மேலும் சயானு சாக்கோ தனக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆவதாக கூறி தனது மனைவி பற்றியும் போலீஸ்காரரிடம் கவலையை வெளிப்படுத்துகிறார். அவருக்கு போலீஸ்காரர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிகிறது.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கொலையாளியுடன் பேசும் அந்த போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கேரளாவில் நடந்த கவுரவ கொலை தொடர்பாக முதல் மந்திரி பினராய் விஜயன் பேட்டி அளித்தார். அப்போது நாட்டில் நடக்கக்கூடாத ஒரு வருத்தமான சம்பவம் கேரளாவில் நடந்து விட்டது. இனி இதுபோல சம்பங்கள் நடக்கக்கூடாது.

    கால மாற்றத்திற்கு ஏற்ப பிள்ளைகள் நலனை கருதி பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்டவர்களே தங்கள் மகளின் காதலை ஏற்காமல் அவரது வாழ்வை சிதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் விரைவாக செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #honourkilling #kerala #lovemarriage
    ×